Wednesday, February 24, 2010

Personal

"மருதூர்க்கனி" - முஹம்மது ஹனிபா


மருதமுனை மண்ணின் மணம் பரப்ப பிறந்த மண்ணின் மைந்தர்களில்,  மக்களின் மனதில் என்றும் அழியா இடம் பிடித்து அரியணையில் அமர்ந்திருக்கும், ‘மக்கள் கவி’ மருதூர்க்கனி 1942ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ம் திகதி உதுமாலெப்பை சுலைஹா உம்மா தம்பதியாரின் ஏழு குழந்தைகளில் தலைமகனாகப்பிறந்தார். இவரின் இயற்பெயர் முஹம்மது ஹனிபா. இளவயது முதலே துடிப்பும், சுதந்திர உணர்வும் அவரிடம் நிறைந்து காணப்பட்டது. கண்முன் நடக்கும் கொடுமைகளைக் கண்டு, கொதித்தெழுவதும், அதன் பலனாய் தண்டணைகள் பெறுவதும் அவருக்கு சர்வசாதாரணமாய் அமைந்திருந்தது. தனது ஆரம்பக்கல்வியை ஆங்கில மொழியிலேயே தொடங்கிய போதும் தமிழ்மேல் அவருக்கிருந்த பற்றுதலினால் பள்ளிப்படிப்பை தமிழிலேயே SSC வரை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் பயின்றார். அதன் பலனாய் 18வது வயதிலேயே அவருக்கு ஆசிரியர் பதவியும் கிடைத்தது. பின் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் இரண்டு வருடங்கள் ஆசிரியர் பயிற்சியை பெற்றார்.



தனது செயல்கள், சிந்தனைகள் ஒவ்வொன்றுமே இனி வரும் தலைமுறையினருக்கு ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என நினைத்தார். காதலித்து திருமணம் முடித்துக்கொண்டார். ஆனாலும் நமது இளைஞர்கள் போல் பொன் கொண்ட பெண் வேண்டி காத்திருக்கவில்லை. ஒரு சாதாரண குடும்ப பெண்ணான காமிலாவை கைக்கூலியின்றி 1968ம் ஆண்டு கைப்பிடித்தார். அப்போது முதுசமாகவும் அவரிடம் எதுவும் இருக்கவுமில்லை. வாழ்வை அடிமட்டத்திலிருந்து ஆரம்பித்தார். அதனாலேயே என்னவோ அவரின் உணர்வுகள் அடிமட்ட ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களுக்காகவே கொதித்தது. ‘ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்’ என்பார்கள் ஆனாலும் நான்கு பெண்பிள்ளைகளைப் பெற்று, அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து, அவர்கள் தலைநிமிர்ந்து வாழ வழிகாட்டி, அவரும் அரசனாகவே வாழ்ந்து காட்டினார்.


இன்றைய தலைமுறையினருக்கு அவரை ஒரு சிறந்த எழுதாளனாகவும் அரசியல்சித்தாந்தகராகவும் மட்டுமே தெரிந்திருக்கும். நல்ல கல்வியை போதித்த நல்லாசானாக, நலிந்தவர்களுக்காக போராடிய தொழிற்சங்கவாதியாக, கொந்தளிக்கும் கடலிலே வலையோடு சென்று மீன் பிடித்து வந்த மீனவனாக, மருதமுனை நெசவை வடக்கு வரை எடுத்துச்சென்று வாழ்வு நடத்திய தொழிலாளியாக, நாட்டு நடப்புக்களை தைரியமாக  பக்கச்சார்பின்றி  பத்திரிகைக்கு எழுதிய நிருபராக, புகைப்படக்கலைஞனாக அவர் வாழ்ந்திருக்கின்றார்.

இவரின் முதற்கவிதை ‘நினைவு ’ம் ஒரு காதல் கவிதைதான். மே 63இல் பிரசுரமானது. அனேகமான எழுத்தாளர்கள் ஒன்று கவிதையையோ அல்லது கதையையோ எழுதுவதில் விற்பண்ணர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவை இரண்டையும் அழகாக எழுதுவது மருதூர்க்கனியின் தனிச்சிறப்பு. 1965ஆம் ஆண்டு இவர் எழுதிய முதற்கதை ‘பசி’ க்கு ‘செய்தி’ப் பத்திரிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் முதலிடம் கிடைத்தது. கதை, கவிதையுடன் மட்டுமல்ல அவர் நாடகம் இயற்றுவதிலும், நடிப்பதிலும் கூட தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவரது ‘சோழன் மகன்’ கவிதை நாடகம் அகில இலங்கைக்கான போட்டியில் சிறந்த நாடகமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இவரது எழுத்து ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டல்களுக்கும் எதிராகவே எப்பொழுதும் குரல் கொடுத்து வந்துள்ளது. மக்கள் எப்பொழுதும் சுதந்திரக் காற்றையே சுவாசிக்க வேண்டும் என விரும்பினார். முற்போக்கு சிந்தனையுடைய இவர் வர்க்கபேதமற்ற வாழ்விலேயே ஒடுக்கு முறைகளும், சுரண்டல்களும் இல்லாதொழியும் எனவும் நம்பினார். எதைக்கண்டு அவர் மனம் வெந்து அதைக் கதைகளாகவும் கவிதைகளாகவும் எழுதினாரோ அது இன்றும் இன்னமும் அப்படியே இருக்கிறது. வர்க்கமுரண்பாடு வழிவழியாகத் தொடர்ந்துகொண்டே வருகிறது. தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று வாழுகின்ற இந்த சமுதாயத்தை தன் எழுத்துக்களால் விழிக்கச் செய்யலாம் என நினைத்தார். உறங்குபவனை எழுப்பி விடலாம், உறங்குவது போல் பாசாங்கு செய்பவனை எவ்வாறு எழுப்புவது? இவரது கவிதைகளும், கதைகளும் வெறுமனே பொழுது போக்கிற்காக வாசித்துவிட்டு, தூக்கிப்போட்டு விட்டு செல்லக்கூடிய ஒன்றல்ல. ஒவ்வொன்றும் ஒவ்வோர் படிப்பினை. அவற்றைப் படிக்கும் போதே, படிப்பவர் உள்ளமும் அநீதிகைளைக் கண்டு கிளர்ந்தெழத் துடிப்பதை, அவர் எழுத்துக்களை படித்த வாசகர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. 


ஒரு மனிதன் தனக்குப் பின் தன் பெயர் சொல்ல ஒரு ஆண்மகனைப் பெற்றிருக்க வேண்டும் இல்லை எனில் ஒரு புத்தகமாவது வெளியிட்டிருக்க வேண்டும் எனக் கூறுவார்கள். மருதூர்க்கனி 5 புத்தகங்களை எழுத்துருவில் கொண்டு வந்தார், ஆனாலும் அவற்றில் இரண்டான ‘மண்பூனைகளும் எலி பிடிக்கும்’ என்ற சிறுகதைத்தொகுதியும், ‘அந்த மழைநாட்களுக்காக’ என்ற கவிதைத்தொகுதியுமே அவர் கண்ணோடு 2002ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மற்றைய ‘என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்’, ‘சந்தனப்பாட்டகமும் கிலாபத்துக்கப்பலும்’, ‘மருதூர்க்கனி கவிதைகள்’ ஆகிய மூன்றும் பிரசுரத்திற்காய் காத்துக்கிடக்கின்றன. இவரின் கலைச்சேவைக்காய் 2004ம் ஆண்டு ‘கலாபூஷணம்’ விருது வழங்கப்பட்டது.

வளரிளம் பருவம் தொட்டே வர்க்கமுரண்பாடுகளுக்காக குரல் கொடுத்து வந்தவர் மக்கள் நலன் கருதியே அரசியலிலும் களமிறங்கினார். முற்போக்கு சிந்தனையுடைய இவர் ஆரம்பத்தில் ஒரு இடதுசாரியாகவே போராடினார். முஸ்லிம்கள் ஒரு தனி சமூகம், அவர்களின் பிரச்சனைகள், உரிமைகள் என்பவற்றிற்காக நடுநிலையாக நின்று சிந்தித்து செயற்படவென ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ ஐ மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடன் இணைந்து 1981ம் ஆண்டு ஒரு இயக்கமாக உருவாக்கினார். பின் 1988ம் ஆண்டே அது அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றது. இடைப்பட்ட காலத்தில் மக்களுக்காக, இவர்கள் பாடுபட்டதும், அவர்கள் இவர்களை தூக்கியெறிந்ததும், பின் ஏற்றுக்கொண்டதும் வரலாறு. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடன் தோள்கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் இனவாத  வெயிலிலிருந்து மக்களைக் காக்க ஒரு விருட்சத்தை முளையிலிருந்து வளர்த்தார்கள். அது பூத்துக் காய்த்து குலுங்கும் போது தலைவர் அவர்கள் இறையடி சேர்ந்தார். அதன்பின் இவர் கண் முன்னேயே அது சூறையாடப்பட்டு, தறித்து துண்டு துண்டாக்கப்பட்டதை கண்டு மனம் நொந்து நடைபிணமானார்.




1989ம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் புலிகளின் பலத்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தேர்தலில் போட்டியிடாமல் ஒழித்தோடிய பலரிற்கு நடுவிலும் உயிரைப் பணயம் வைத்து, போட்டியிட்டார். இருந்த போதும் மருதமுனை மக்கள் இவரை நிராகாரித்தனர். பின் தனது மண், தனது மக்கள் என அவர்களுக்கு சேவை செய்வதற்காகவே 2000ம் ஆண்டு தேசியபட்டியலில் பாராளுமன்றத்திற்கு சென்றார். மருதமுனையின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையும் இவரையே சாரும். தன் மக்களுக்கு சேவை செய்யக் கிடைத்ததோ ஒரே ஒரு வருடம் தான். இருப்பினும் தன்னால் முடிந்த வரை வேலை வாய்ப்புக்ககளையும், அபிவிருத்திகளையும் செய்துள்ளார். உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களை வசீகரிக்கும் மருதனையின் அழகிய கடற்கரை இரவு வேளைகளில் இருளில் மூழ்கிக் கிடந்ததைக்கண்டு, கடற்கரை நெடுகிலும் வீதி விளக்குகளையும், மக்கள் இளைப்பாற கருங்கல் வாங்குகளையும் அமைத்துக் கொடுத்தார். தமது கிராமத்திற்கென்று ஒரு சிறு மகப்பேற்று மருத்துவமனையாவது வேண்டுமென்று அதனையும் அமைத்துக் கொடுத்தார். ஆனால் இவையிரண்டுமே இப்போது எம்மால் காணக்கிடைக்காது. ஏனெனில் அவற்றையெல்லாம் 2004ம் ஆண்டு வந்து சென்ற சுனாமி விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது. இது காலத்தின் கொடுமை. மருதமுனை நூலகசாலைக்கு இருந்த கட்டிட பற்றாக்குறையையும், புதிய கட்டிடங்களை அமைக்க உதவி நிவர்த்தி செய்தார். இவரின் மக்கள் சேவைகளைக் கௌரவிக்கும் முகமாக 1998ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களால் ‘இலங்காதிலக’ விருது வழங்கப்பட்டது.

எழுத்தே இவரின் உயிர் மூச்சாய் இருந்தது. ஆரம்பத்தில் சுரண்டப்பட்ட மக்களுக்காக கதைகளும் கவிதைகளும் எழுதியவர், மக்களின் நலன் கருதி அரசியலில் இணைந்த பின்னும் தனது எழுத்துக்களை அரசியல் போராட்டத்திற்காக பயன்படுத்தினார். நாள்தோறும் இவரது அறிக்கை இல்லாமல் தமிழ் பத்திரிகை பிரசுரமாவதே அரிது. அவர் ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ சார்பாக பத்திரிகை ஒன்றை நடாத்தி வந்தார். இதன் பயனாக 1989ம் ஆண்டு புலிகளால் கடத்திச் செல்லப்பட்டார். பின் 1990ம் ஆண்டு ஆயுதக் குழுவொன்று அவர் வீட்டினுள் இரவு வேளையில் நுழைந்து ஆயுதமுனையில் நகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றது. அத்துடன் இவரின் பிள்ளைகளின் பள்ளிப்படிப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதனால் இவரும், சிறிது காலத்தின் பின் அன்னாரின் குடும்பமும் கொழும்பை நோக்கி பாதுகாப்புத் தேடி ஓடியது.

“எப்போதோ எழுதப்பட்ட மார்க்சிம் கோர்க்கியின் ‘தாய்’ இப்போதும் மூன்றாம் உலக நாட்டுத்தொழிலாளர்களின் பாடப்புத்தகமாக இருப்பது போல, எனது சில கதைகளாவது முற்போக்கு உதாரண எழுத்தாய் நின்று நிலைபெறும் என்று, தன்னடக்கத்தோடு நான் நம்புகிறேன்.” என தனது சிறுகதைதொகுதியின் முன்னுரையிலே அன்று மருதூர்க்கனி கூறிச்சென்றது, இன்று நிஜமாகியுள்ளது. ஆம், 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தப்பட்ட புதிய பாடத்திற்கான தரம் 11 இன் ‘தமிழ்மொழியும் இலக்கியமும்’ பாடப்புத்தகத்திலே 'மண்பூனைகளும் எலிபிடிக்கும்’ எனும் சிறுகதை பிரசுரமாகி அவரின் கனவொன்று நனவாகியுள்ளது.


இறுதி வரை மக்கள் நலன்விரும்பியாகவே வாழ்ந்தார். 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் திகதி இறையடி சேர்ந்தார். 
இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜிஊன்.  

(Source: மருதூர்க்கனி அவர்களின் புதல்விகள்)








3 comments:

  1. நான் சந்தித்த மிக நல்ல மனிதர்களுள் மருதூர்க்கனி அங்கிளும் ஒருவர். ஒரு கவிஞனாய், எழுத்தாளனாய், கலா ரசிகனாய், அரசியல்வாதியாய், குடும்ப தலைவனாய், எல்லாவற்றுக்கும் மேலாய் ஒரு இனிய மனிதராய் தன் வாழ்வை வெற்றியாய் வாழ்ந்து காட்டியவர்.
    அவரின் சமூகம் மீதான பார்வை, குறிப்பாய் இளைஞர்கள் மீதான முற்போக்குச் சிந்தனைகள் என்னை வியக்க வைத்திருக்கின்றன. முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவரது எழுத்தும், அரசியல் மேடைப் பேச்சுகளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதை யாரும் மறுத்துவிடமுடியாது. அவரது சுவாரஸ்யமான இயல்பான பேச்சும், தன்னலமிக்க சமூகக் கண்ணோட்டமும், புத்தி சொல்லும் அன்பான மனப்பாங்கும் என் மனதில் பதிந்துவிட்ட விஷயங்கள். இவரது 'மண்பூனைகளும் எலிபிடிக்கும்' என்ற சிறுகதைத்தொகுதி 'தமிழ்மொழியும் இலக்கியமும்' பாடப்புத்தகத்தில் பிரசுரமானதயிட்டு மகிழ்வுறுவதோடு, பிரசுரிக்கப்படாத ஏனைய கவிதை தொகுதிகளும் புத்தகவடிவில் வெளிவரவேண்டும் என்பதே எனது ஆசையாகும். இறைவன் அருள்புரியட்டும்.
    MAY ALLMIGHTY ALLAH BLESS HIM WITH “JANNATHUL FIRTHOUS” FOREVER.

    Hasen Ali Asif Nimry.

    ReplyDelete
  2. நான் சந்தித்த மிக நல்ல மனிதர்களுள் மருதூர்க்கனி அங்கிளும் ஒருவர். ஒரு கவிஞனாய், எழுத்தாளனாய், கலா ரசிகனாய், அரசியல்வாதியாய், குடும்ப தலைவனாய், எல்லாவற்றுக்கும் மேலாய் ஒரு இனிய மனிதராய் தன் வாழ்வை வெற்றியாய் வாழ்ந்து காட்டியவர்.
    அவரின் சமூகம் மீதான பார்வை, குறிப்பாய் இளைஞர்கள் மீதான முற்போக்குச் சிந்தனைகள் என்னை வியக்க வைத்திருக்கின்றன. முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவரது எழுத்தும், அரசியல் மேடைப் பேச்சுகளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதை யாரும் மறுத்துவிடமுடியாது. அவரது சுவாரஸ்யமான இயல்பான பேச்சும், தன்னலமிக்க சமூகக் கண்ணோட்டமும், புத்தி சொல்லும் அன்பான மனப்பாங்கும் என் மனதில் பதிந்துவிட்ட விஷயங்கள். இவரது 'மண்பூனைகளும் எலிபிடிக்கும்' என்ற சிறுகதைத்தொகுதி 'தமிழ்மொழியும் இலக்கியமும்' பாடப்புத்தகத்தில் பிரசுரமானதயிட்டு மகிழ்வுறுவதோடு, பிரசுரிக்கப்படாத ஏனைய கவிதை தொகுதிகளும் புத்தகவடிவில் வெளிவரவேண்டும் என்பதே எனது ஆசையாகும். இறைவன் அருள்புரியட்டும்.
    MAY ALLMIGHTY ALLAH BLESS HIM WITH “JANNATHUL FIRTHOUS” FOREVER.

    Hasen Ali Asif Nimry.

    ReplyDelete
  3. நான் சந்தித்த மிக நல்ல மனிதர்களுள் மருதூர்க்கனி அங்கிளும் ஒருவர். ஒரு கவிஞனாய், எழுத்தாளனாய், கலா ரசிகனாய், அரசியல்வாதியாய், குடும்ப தலைவனாய், எல்லாவற்றுக்கும் மேலாய் ஒரு இனிய மனிதராய் தன் வாழ்வை வெற்றியாய் வாழ்ந்து காட்டியவர்.
    அவரின் சமூகம் மீதான பார்வை, குறிப்பாய் இளைஞர்கள் மீதான முற்போக்குச் சிந்தனைகள் என்னை வியக்க வைத்திருக்கின்றன. முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவரது எழுத்தும், அரசியல் மேடைப் பேச்சுகளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதை யாரும் மறுத்துவிடமுடியாது. அவரது சுவாரஸ்யமான இயல்பான பேச்சும், தன்னலமிக்க சமூகக் கண்ணோட்டமும், புத்தி சொல்லும் அன்பான மனப்பாங்கும் என் மனதில் பதிந்துவிட்ட விஷயங்கள். இவரது 'மண்பூனைகளும் எலிபிடிக்கும்' என்ற சிறுகதைத்தொகுதி 'தமிழ்மொழியும் இலக்கியமும்' பாடப்புத்தகத்தில் பிரசுரமானதயிட்டு மகிழ்வுறுவதோடு, பிரசுரிக்கப்படாத ஏனைய கவிதை தொகுதிகளும் புத்தகவடிவில் வெளிவரவேண்டும் என்பதே எனது ஆசையாகும். இறைவன் அருள்புரியட்டும்.

    MAY ALLMIGHTY ALLAH BLESS HIM WITH “JANNATHUL FIRTHOUS” FOREVER.

    Hasen Ali Asif Nimry.

    ReplyDelete